×

சென்னையில் ‘குப்பையில்லா பகுதிகள்’ திட்டம் அமல்; சாலைகளில் இனி குப்பை இருக்காது: மாநகராட்சி நடவடிக்கை

சென்னை: சென்னையில் ‘குப்பையில்லா பகுதிகள்’ திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதால், சாலைகளில் இனி குப்பை இல்லாமல் தூய்மையாக பராமரிக்கப்படும், என மாநகராட்சி அதிகாரி தெரிவித்துள்ளார். பெருநகர  சென்னை மாநகராட்சிக்குட்பட்ட  பகுதிகளில் நாளொன்றுக்கு சராசரியாக 5,200  மெட்ரிக் டன் திடக்கழிவுகள்  சேகரிக்கப்படுகிறது.

இதில், தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகர், அண்ணாநகர் மற்றும் அம்பத்தூர் (சில பகுதிகள்) மண்டலங்களுக்குட்பட்ட பகுதிகளில் மாநகராட்சி சார்பிலும், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம்,  வளசரவாக்கம், ஆலந்தூர், அடையாறு, பெருங்குடி  மற்றும் சோழிங்கநல்லூர் ஆகிய  மண்டலங்களுக்குட்பட்ட பகுதிகளில் உர்பேசர் மற்றும் சுமீத் நிறுவனத்தின்  சார்பிலும், திருவொற்றியூர், மணலி, மாதவரம் மற்றும்  அம்பத்தூர் (சில  பகுதிகள்) மண்டலங்களுக்குட்பட்ட பகுதிகளில் சென்னை  என்விரோ நிறுவனத்தின்  சார்பிலும் தூய்மைப்  பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

குறிப்பாக தூய்மைப் பணியாளர்கள் மூலம் நாள்தோறும் வீடுகளுக்கே சென்று மக்கும், மக்காத குப்பைகளை தனித்தனியாக பெறுவது, முக்கிய பகுதிகளில் குப்பை தொட்டிகள் வைப்பது உள்ளிட்ட பல நடவடிக்கைகளில் மாநகராட்சி ஈடுபட்டுள்ளது.
இவ்வாறு சேகரிக்கப்படும் குப்பைகள், லாரிகள் மூலம் பெருங்குடி மற்றும் கொடுங்கையூர் குப்பை கிடங்குக்கு கொண்டு செல்லப்படுகிறது. அதுமட்டுமின்றி தனியார் கடைகள், அங்காடிகள் மற்றும் வணிக வளாகங்களில் குப்பைகளை மக்கும், மக்காத குப்பைகளாக சேகரிக்கும் வகையில் பச்சை மற்றும் நீல நிறத்தினாலான 2 குப்பை தொட்டிகளை வைக்க மாநகராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சென்னையை தூய்மையாக பராமரிக்கும் வகையில்  சென்னை மாநகராட்சி சார்பில் ‘குப்பையில்லா பகுதிகள்’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி, பிப்ரவரி 11ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த திட்டத்தில் முதற்கட்டமாக 18 சாலைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அங்கு மாநகராட்சியின் சார்பில் குறிப்பிட்ட இடைவெளிகளில் 442 சிறிய வகை குப்பை தொட்டிகள் அமைத்தல் (பேருந்து நிறுத்தங்கள் அருகில்), சிறிய குப்பை தொட்டியுடன் கூடிய மிதிவண்டிகளில் தூய்மை பணியாளர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு ஒருமுறை ரோந்து பணியில் ஈடுபடுதல், சாலைகளில் குப்பைகளை கொட்டும் நபர்களின் மீது அபராதம் விதித்தல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

இது குறித்து சென்னை  மாநகராட்சி அதிகாரி கூறுகையில், ‘‘தற்போது சோதனை அடிப்படையில் இந்த திட்டத்தை அமல்படுத்தி உள்ளோம். முழுமையாக அமல்படுத்த இன்னும் ஒரு வார காலம் ஆகலாம். தற்போதைக்கு அனைத்து மண்டலங்களிலும் குறிப்பிட்ட இடைவெளியில் குப்பைத்தொட்டி அமைத்து இருக்கிறோம். தூய்மைப் பணியாளர்கள் காலை, மாலை என இரு வேளைகளிலும் சென்று அந்த குப்பைத் தொட்டியை சுத்தம் செய்வார்கள்.

இதற்கென தனியாக யாரையும் நியமிக்கவில்லை. இருக்கும் தூய்மைப் பணியாளர்களை பிரித்து பணிக்கு அமர்த்தி இருக்கிறோம். அபராதம் பொறுத்தவரையில், தற்போது வரை அதை வசூலிக்க மாட்டோம். முதல்கட்டமாக விழிப்புணர்வு பலகைகள் அமைக்கப்பட உள்ளது. தேவைப்படும்போது அபராதம் வசூலிக்கப்படும். சாலைகளில் குப்பை மட்டுமல்லாமல் எச்சில், சிறுநீர் கழிப்பவர்களுக்கு கண்டிப்பாக அபராதம் விதிக்கப்படும்’’ என்றார்.

பஸ் நிறுத்தங்கள் தூய்மையாக மாறும்: திடக்கழிவுகளை சாலை மற்றும் பொது இடங்களில் கொட்டுவது அல்லது தூக்கி எறிவதை தடுக்க மாநகராட்சியின் சார்பில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன் மூலம் சென்னையில் 196 பேருந்து நிறுத்தங்கள் குப்பையில்லாமல் தூய்மையுடன் பராமரிக்கப்பட  உள்ளன.

குப்பை இல்லாத பகுதிகள்: சென்னையில் திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் 5.8 கிலோ மீட்டர், மணலி காமராஜர் சாலையில் 2.8 கிலோ மீட்டர், மாதவரம் ஜி.என்.டி சாலையில் 7.2 கிலோ மீட்டர், அம்பத்தூர் சாலை - ரெட்ஹில்ஸ் சாலையில் 4.5 கிலோ மீட்டர், தண்டையார்பேட்டை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் 3.95 கிலோ மீட்டர், ராயபுரம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் 3.4 கிலோ மீட்டர், பெரம்பூர் (தெற்கு) நெடுஞ்சாலையில் 1.05 கிலோ மீட்டர், அம்பத்தூர் - ரெட்ஹில்ஸ் சாலையில் 4 கிலோ மீட்டர், அண்ணா நகர் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் 6.8 கிலோ மீட்டர், கதீட்ரல் சாலையில் 1.1 கிலோ மீட்டர், டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் 2.15 கிலோ மீட்டர், கோடம்பாக்கம் தியாகராயா சாலையில் 1.5 கிலோ மீட்டர், கோடம்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் 1.5 கிலோ மீட்டர், வளசரவாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் 3.5 கிலோ மீட்டர், ஆலந்தூர் ஜி.எஸ்.டி. சாலையில் 10 கிலோ மீட்டர், பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரை சாலையில் 0.8 கிலோ மீட்டர், பெருங்குடி ராஜிவ்காந்தி சாலையில் 3.2 கிலோ மீட்டர், சோழிங்கநல்லூர் ராஜிவ்காந்தி சாலையில் 11 கிலோ மீட்டர் வீதம் குப்பை இல்லா பகுதியாக மாநகராட்சி அறிவித்துள்ளது.

சாலைகள் தேர்வு: இந்த திட்டத்தின் மூலம் முதற்கட்டமாக சென்னையில் உள்ள 18 சாலைகளை குப்பையில்லா  பகுதிகளாக அறிவிப்பதன் மூலம் 74.3 கிலோ மீட்டர் நீள சாலைகள், 196 பேருந்து  நிறுத்தங்கள் குப்பையில்லாமல் தூய்மையுடன் பராமரிக்கப்பட உள்ளன.

Tags : Chennai , Implementation of 'Litter Free Zones' program in Chennai; No More Garbage on Roads: Corporation Action
× RELATED சென்னை சேப்பாக்கத்தில்...